×

ரூ.95.03 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மேற்கூரை அமைப்புடன் கூடிய 84 நவீன நெல் சேமிப்பு தளங்கள் திறப்பு !!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (25.04.2023) தலைமைச் செயலகத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் ஒன்பது மாவட்டங்களில் 93 கோடியே 3 இலட்சம் ரூபாய் செலவில் மொத்தம் 1,16,800 மெட்ரிக் டன் கொள்ளளவில் மேற்கூரை அமைப்புடன் கூடிய 84 நவீன நெல் சேமிப்பு தளங்களையும், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டத்தில் 750 மெட்ரிக் டன் கொள்ளளவில் 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வட்ட செயல்முறை கிடங்கினையும் திறந்து வைத்தார். மேலும், 39 கோடியே 37 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 10 மாவட்டங்களில் கட்டப்படவுள்ள 63 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையிலும், பொது விநியோகத் திட்டத்திற்கான உணவு தானியங்களை சேமித்து வைத்திடும் நோக்குடன் கிடங்குகளின் கொள்ளளவினை உயர்த்தும் வகையிலும், உணவுப் பாதுகாப்பின் அங்கங்களான சேமிப்பு, விற்பனை ஆகியவற்றில் முக்கிய பங்காற்றி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக சேமிப்பு கிடங்குகளை அதிகரித்து உணவு தானியங்களை நவீன முறையில் சேமித்து வைத்திடவும், விவசாயிகளிடமிருந்து கிராம அளவில் நவீன கட்டமைப்புடன் கூடிய புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டுவதற்கும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேற்கூரை அமைப்புடன் கூடிய 84 நவீன நெல் சேமிப்பு தளங்கள் மற்றும் வட்ட செயல்முறைக் கிடங்கு திறந்து வைத்தல்

தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தினை வட்ட அளவில் செம்மையாக செயல்படுத்திடவும், விவசாயிகளின் கடின உழைப்பில் உற்பத்தியான நெல் மணிகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, அவற்றினை இயற்கை பேரிடர் மற்றும் மழை பொழிவுகளிலிருந்து பாதுகாப்பாக சேமித்து வைத்திட தமிழ்நாட்டின் பத்து மாவட்டங்களின் பதினெட்டு இடங்களில் மொத்தம் 2,86,350 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்பு தளங்கள் மொத்தம் 238 கோடியே 7 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவ ஆணையிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, முதற்கட்டமாக, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 105 கோடியே 8 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மொத்தம் 1,42,450 மெட்ரிக் டன் கொள்ளளவுடன் அமைக்கப்பட்டுள்ள 106 மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த 11.02.2023 அன்று பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டமாக தற்போது அரியலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருவள்ளூர், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் 93 கோடியே 3 இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,16,800 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 84 மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்களையும், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், புதுக்காடு கிராமத்தில் 750 மெட்ரிக் டன் கொள்ளளவில் 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வட்ட செயல்முறை கிடங்கினையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

அடிக்கல் நாட்டப்பட்ட 63 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

விவசாயிகளின் விலை பொருளான நெல்லினை அரசு கொள்முதல் நிலையங்கள் மூலம் விரைந்து கொள்முதல் செய்திட ஏதுவாக, விவசாயத்தை பிரதானமாக கொண்டுள்ள கிராமங்கள் தோறும் விவசாயிகளின் நலன் கருதி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பதற்கு அரசு உறுதி பூண்டுள்ளது.

அதன்படி, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தலா 250 மெட்ரிக் டன் நெல்லினை சேமித்து வைத்திடும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 20 நிலையங்கள், திருவாரூர் மாவட்டத்தில் 10 நிலையங்கள், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் தலா 7 நிலையங்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் 9 நிலையங்கள், புதுக்கோட்டை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் தலா 3 நிலையங்கள், கடலூர் மாவட்டத்தில் 2 நிலையங்கள், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா 1 நிலையம், என மொத்தம் 10 மாவட்டங்களில் 39 கோடியே 37 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 63 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டுவதற்கான பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

இதன்மூலம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மணிகள் மழைக்காலங்களில் சேதமடையாத வகையில் பாதுகாப்பாக சேமித்து வைக்கப்படுவதுடன், விவசாயிகள் தங்களது அறுவடை செய்யப்பட்ட நெல்லினை கிராமத்தின் அருகாமையிலேயே அரசு கொள்முதல் நிலையங்களில் அரசு நிர்ணய விலையில் விற்பனை செய்திட ஏதுவாக அமையும். மேலும், இதனால் விவசாயிகளின் போக்குவரத்து இடர்பாடுகள் மற்றும் செலவினம் தவிர்க்கப்படும்.

The post ரூ.95.03 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மேற்கூரை அமைப்புடன் கூடிய 84 நவீன நெல் சேமிப்பு தளங்கள் திறப்பு !! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Chief Secretariat, Cooperative, Food and Consumer Protection ,
× RELATED இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட...